For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது”? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

07:29 PM Apr 16, 2024 IST | Web Editor
“கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது”    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
Advertisement

‘மதுரை சித்திரை திருவிழாவின், ஒரு பகுதியான செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கணவனை இழந்தவருக்கு செங்கோல் வழங்கக் கூடாது’ என உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. 

Advertisement

மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

“மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த
விழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படும். விழாவின்
8ஆம் நாளான பட்டாபிஷேகம் அன்று, செங்கோல் மீனாட்சியம்மனின் கைகளில்
ஒப்புவிக்கப்படும். அந்த செங்கோலை உரிய அறங்காவலர் குழுத்தலைவர் பெற்றுக் கொள்வார். ஆகம விதியின்படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக் கொள்ள இயலாது.

தற்போது மீனாட்சியம்மன் கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன். அவர் கணவரை இழந்தவர் என்பதால் கோயிலின் விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. வேறு தகுதியான நபரிடம்
செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி,
“இது போன்ற மனுவை ஏற்கனவே உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு
விசாரணை செய்து, தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

அப்போது நீதிபதி,

“திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என கேள்வி எழுப்பினார். மேலும், கோயிலினுள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்துக்கள் தானே. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ள கடைசி நேரத்தில் வழக்கை தொடர்ந்திருப்பது ஏன்? இந்தக் காலத்திலும் இதுபோல கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags :
Advertisement