"எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா"- ரீல்ஸ் வீடியோவால் போலீசில் சிக்கிய நபர்... நடந்தது என்ன?
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த காணொலிகளுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். சினிமா பாடலுக்கு நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
அந்த வகையில், டிரெண்டாக நினைத்து ரீல்ஸ் வெளியிட்ட பெங்களூரைச் சேர்ந்த நபர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, நபர் ஒருவர் சாலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து தேநீர் அருந்தினார். இந்த ரீல் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி மகடி சாலையில் எடுக்கப்பட்டது. பின்னர், அவர்கள் அந்த காணொளி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர். அவர்கள் நினைத்தபடி, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே, இந்த வீடியோ போலீசாரின் கவனத்தில் சிக்கியது.
இதுகுறித்து நடத்திய தீவிர விசாரணையில் வீடியோவில் இருக்கும் நபரை போலீசார் கைது செய்தனர். "போக்குவரத்து பகுதியில் அமர்ந்து தேநீர் அருந்துவது உங்களுக்கு புகழை தராது, மிகப்பெரிய அபராதத்தை விதிக்கும்! ஜாக்கிரதை BCP உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று போலீசார் எக்ஸில் பதிவிட்டு, அவரது ஸ்டண்ட் மற்றும் கைது நடவடிக்கையைக் காட்டும் வீடியோவை ஷேர் செய்தனர்.