For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - ரயில்வே அமைச்சர் கூறிய பதில் என்ன?

06:53 AM Aug 04, 2024 IST | Web Editor
புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்    ரயில்வே அமைச்சர் கூறிய பதில் என்ன
Advertisement

மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அதிவேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்ற கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதிலளித்துள்ளார்.

Advertisement

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன கட்டுமான கலை அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையமானது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமாக திகழும் வகையில் அமைந்துள்ளது. மும்பை – அஹமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு இருவழி புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டுக்கு வரும்போது இந்த தொலைவை 2.07 மணி நேரத்தில் கடக்க முடியும்.

புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி. இதில், 81%த்தை 0.1% வட்டியில் 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் புல்லட் ரயில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து, மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பல்வேறு கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பினர். இத்திட்டத்தின் தாமதத்துக்கான காரணம் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் முகமது நதிமுல் ஹக் எழுப்பிய கேள்விக்கு, தாமதத்துக்கான காரணத்தைக் குறிப்பிடாத ரயில்வே அமைச்சர், “புல்லட் ரயில் திட்டம் சிக்கலான தொழில்நுட்பத்துடன் கூடியது. பல நாடுகள் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவு செய்ய 20 ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் எடுத்துக்கொண்டன.

கொரோனா பாதிப்பு திட்டப் பணிகளை முட்டுக்கட்டையை ஏற்படுத்தியபோதும், மிகக் குறைந்த காலத்தில் 320 கி.மீ. தூர ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் வழித்தட திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலைய கட்டுமானப் பணிகளோடு, இரு நகரங்களுக்கும் இடையே உள்ள 8 ஆறுகளுக்கு மேல் 508 கி.மீ. தொலைவிலான ரயில் பாலங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடலுக்கு அடியில் செல்லும் ரயில் வழித்தட கட்டுமானப் பணிகளில், முதல் கட்டமாக மகாராஷ்டிராவின் தாணேயில் கடலுக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திட்ட வடிவமைப்பை நிலையில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது. அது முழுமையாக நிறைவடைந்து விட்டால், கட்டுமானப் பணிகள் எந்தவித சிக்கலுமின்றி விரைந்து மேற்கொள்ளப்படும். புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால், 100 முதல் 150 கி.மீ. தூரத்தை 15 முதல் 20 நிமிஷங்களில் சென்றடைந்துவிட முடியும். இந்த புல்லட் ரயிலில் சொகுசு, சாதாரண குளிர்சாதன இருக்கை வசதி என இரண்டு வகுப்புகள் இடம்பெற்றிருக்கும்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement