“தேமுதிக மாநிலங்களவை எம்.பி பதவி கேட்பதில் என்ன தவறு?” - பிரேமலதா விஜயகாந்த்
மாநிலங்களவை எம்.பி பதவி கேட்பதில் என்ன தவறு? என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
14 மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை வேண்டுமென நான் கேட்கவில்லை; ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூறிய கருத்தையே தெரிவித்தேன். யாருடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வெளிப்படையாகத்தான் பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம். கூட்டணி தலைமை ஏற்றிருப்பவர்கள்தான் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அதன்பிறகு கட்சியின் நிலைப்பாடு பற்றி தெரிவிப்போம்.
கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தமிழ்நாட்டில் அனைத்து கட்சியிலும் மாநிலங்களவை எம்.பி. உள்ளனர். அதனை கேட்கும் உரிமை தேமுதிகவுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணிக்கு இழுப்பதற்கு முயற்சித்து வருகின்றன. அதனால், எந்தக் கட்சியுடன் இணையலாம் என்பது தொடா்பாக மாவட்டச் செயலா்களுடன் பிரேமலதா அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.