“230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ளவர் அமைச்சர் பதவியில் தொடரலாமா?” - செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி!
230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு சொல்கிறீர்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.
போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
அதே சமயம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினா். அப்போது நீதிபதிகள், அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்திருந்தனர். மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.
இதையடுத்து, அமைச்சா் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே 2 முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், 3-வது முறையாக கடந்த 12-ஆம் தேதி மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் அமைச்சா் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவில், ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது விசாரணையில் தான் தெரியவரும்’ என முதன்மை அமா்வு நீதிமன்றம் கூறியது தவறு. ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது சந்தா்ப்ப சூழ்நிலையால் நிகழ்ந்ததாக கருதுகிறோம்”எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு சொல்கிறீர்கள் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.
அதோடு, கடை நிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே, குற்றவழக்கில் தொடர்புடையவர் அமைச்சராக தொடரலாமா எனவும் வினவினார்.
இதனை அடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.