தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்..? - நயினார் நாகேந்திரன்...!
தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”கோவை காந்திபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்குக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் குப்பை வண்டியில் காலை உணவு அனுப்பி வைத்த அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கது. துளியும் மனிதாபிமானமற்ற இச்செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வுலகில் மனிதனாகப் பிறந்த எவருக்கும் இப்படியொரு அவமானம் நேரக் கூடாது.
கழிவறையில் கூட காசு பார்த்து கொள்ளையடிக்கும் திமுக தலைவர்களை ராஜமரியாதையுடன் நடத்தும் அரசுக்கு, நமது நாட்டைச் சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் என்ன சிக்கல்? எங்களுக்கு உணவளியுங்கள் என்று தூய்மைப் பணியாளர்கள் உங்களைக் கேட்டார்களா? எதற்காக “சோறு போடுகிறோம்” என்ற போர்வையில் அவர்களின் சுயமரியாதையை இப்படி சீண்டிப் பார்க்கிறீர்கள்? விளிம்பு நிலை மக்கள் மீது திமுகவிற்கு உள்ள வெறுப்பு இந்தளவிற்குத் தரம் தாழ்ந்து போகும் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை.
தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூறி இராப்பகலாகப் போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களிடம், “உங்களுக்கு பிரியாணி-லாம் போட்டோமே, அதற்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா?” என்ற தொனியில் சோறு போட்டதைச் சொல்லிக் காட்டிய சுயநலவாதிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? திமுக அரசின் அகம்பாவப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் முதல்வரே, அத்தனைக்கும் வரும் தேர்தலில் வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொள்ளத் தயாராகுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.