“உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது..?”- ஆளுநரின் பணியை குறிப்பிட்டு கனிமொழி பதிவு..!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஏற்படுகிறது என்று தொடுக்கப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம் காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது. செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது. அதே சமயம், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர்களால் கிடப்பில் போட முடியாது. மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குதல், நிராகரித்தல் மற்றும் விளக்கத்துடன் சட்டப்பேரவைக்கு அனுப்புதல் அல்லது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குதான் ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “ஆளுநர் வேலை பார்ப்பது” என்று கலைஞர் அவர்கள் பதிலளித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.