அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற திமுக அரசு வேறு என்ன செய்தது? - எடப்பாடி பழனிசாமி கேள்வி!
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற திமுக அரசு வேறு என்ன செய்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து சோளிங்கர் பாண்டியநல்லூரில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்துகொண்டார்.
பின்னர் மேடையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
“திமுக தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் இனி மக்களை ஏமாற்ற முடியாது. இந்த தேர்தலோடு திமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனை என்ன? நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற வேறு என்ன செய்தீர்கள்.
மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பளு தூக்குவதையும், சைக்கிள் ஓட்டுவதையும் பார்க்க தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான். சட்டமன்ற தேர்தலின் போது பெட்டியில் போடப்பட்ட பொதுமக்களின் மனு என்ன ஆனது? சாவி தொலைந்து விட்டதா? பெட்டி காணாமல் போய் விட்டதா?
மக்களின் ஆசையை தூண்டி மக்களை ஏமாற்றியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். மக்களை தந்திரமாக ஏமாற்றுவதில் விஞ்ஞான மூளையை பயன்படுத்துபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்றத்தை முடக்கி காவேரி நதி நீர் ஆணையத்தை அமைத்தது அதிமுக அரசின் சாதனை. அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்பதற்காக 7.5% உள்ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக தான்.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்காத இடமே இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தேர்தல் பத்திரத்தை பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி உள்ளது. சூதாட்டத்தில் இருந்து வந்த பணத்தில் கட்சி நடத்தும் கட்சி திமுக. ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனத்திடம் இருந்து ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் வாங்கி உள்ளது திமுக. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு. போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில் முதலிடம்”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.