காவலர்களுக்கு வார விடுமுறை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மதுரையைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தமிழக காவல் துறையில் அதிக பணிச்சுமை இருப்பதாகவும், ஓய்வின்றி பணியாற்ற வேண்டி உள்ளதாகவும் காவலர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. காவல்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஆகவே, காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு, வார விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 2021ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த அரசாணை முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. எனவே, காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு, வார விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டுதேவானந்த், வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பை வெளியிட்டார். அதில், “காவல்துறையினரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் பேணும் வகையில் வார விடுப்பு வழங்கி தமிழக முதல்வர் அறிவித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. ஆகவே அவரது மனு ஏற்கப்படுகிறது. காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு, வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு தாக்கல் செய்யலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.