“பொருளாதார வளர்ச்சியில் விரைவில் மூன்றாம் இடத்திற்கு வருவோம்” - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
“பொருளாதார வளர்ச்சியில் 10 ஆண்டுகளில் முதல் 5 இடத்திற்கு வந்தோம். விரைவில் மூன்றாம் இடத்திற்கு வருவோம்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வாக்கு சேகரித்தார். சிதம்பரம் பேருந்து நிலையம், காந்தி சிலை அருகே பரப்புரை கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நமது வேட்பாளர் கார்த்தியாயினியை வெற்றி பெறச் செய்யுங்கள். அதுவும் மிகப்பெரிய
வெற்றியை பதிவு செய்யுங்கள். தமிழ்நாட்டிலிருந்து ஓர் ஆதிதிராவிடப் பெண் நமது
மக்கள் சேவைக்கு முன் வருகிறார். அவரை நாம் வெற்றி பெற செய்ய அவருக்கு நம் ஆரதவு வேண்டும். சிதம்பரம் தொகுதி மக்களுக்கு, பாஜக அரசின் மூலமாக
என்னென்ன திட்டங்கள் கிடைத்தது என்பதை மட்டும் தெரிவிக்கிறேன்.
இலவசமாக 80 கோடி மக்களுக்கு குடும்பத்தில் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ வீதம்
அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதில் ஒன்று
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 60 கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்காக ரூ.125
கோடி வழங்கப்பட்டுள்ளது. முதுமை புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன், சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்ற பிறகு மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த பல்கலைக்கழகத்திற்காக எதுவும் செய்யவே இல்லை. UPA அரசு முழுவதும் ஊழல் மலிந்து இருக்கிறது. இவர்களின் ஊழலை கணக்கிடவே முடியாது.
ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, வங்கி என அனைத்திலும் ஊழல் செய்து நம் நாட்டை பின்னோக்கி கொண்டு சென்றனர். இன்று மோடி அரசு அதனை மீட்டு எடுத்துள்ளது. 10 ஆண்டுகளில் முதல் 5 இடத்தில் வந்தோம். விரைவில் மூன்றாம் இடத்திற்கு வருவோம்.
தமிழ்நாட்டுக்கு 2019ல் கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு சாலை திட்டத்தால் பல்வேறு
நகரங்கள் இணைக்கப்பட்டு, பாதுகாப்பு உபகரண தயாரிப்பு வருவாய் உயர்ந்துள்ளது
இப்படி திட்டங்களை கொண்டு வந்த பிரதமருக்கு கருப்பு கொடியும், கருப்பு பலுனும்
பறக்கவிட்டனர். ஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காக, போதை பொருளால் இளைஞர்களை அழித்து வரும் இவர்கள் விரைவில் அழிவார்கள். 10 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை” என தெரிவித்தார்.
முன்னதாக ஓசூரில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
“இந்தியா அளவில், தமிழ்நாட்டின் மீது பிரதமர் நரேந்திர மோடி தனி அக்கறை செலுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார். சாலையோர வியாபாரிகள் கூட வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்ற நிலைக்கு PM svanithi திட்டம் வழி ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மாதிரி ஓசூர் தொழில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அடுத்த 5
ஆண்டுகளுக்கும் 80 கோடி மக்களுக்கு விலையில்லா உணவு பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்க ஆணையிடப் பட்டுள்ளது.
பிரதமர் வீடு வழங்கும் திட்டம், முதியோர்களுக்கு பென்சன் திட்டம், ஸ்டார்ட் அப்
திட்டத்தின் கீழ், சிறு நிறுவனங்களும் கடன் பெற்று உலகம் முழுவதும் பெயர்
பெற்ற நிறுவனங்களாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது போன்ற எண்ணற்ற
திட்டங்களை வழங்கியது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் மீது தனி மரியாதை வைத்துள்ளார்.
வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருவதுபோல பிரதமர் மோடி சீசன் காலத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிரதமர் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அந்த வார்த்தையை பயன்படுத்துவதே தவறு. தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருட்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை திமுக சம்பாதித்துள்ளது.
தமிழ்நாட்டில் மது, போதை பொருட்கள் எங்கு வேண்டுமானாலும் எளிதில் கிடைக்கும்
நிலை நிலவி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். ஒரு குடும்பத்திற்கு மட்டும்
வளர்ச்சி உள்ளது. அதனை மாற்றி தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் வளர்ச்சி
கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பிரதமர் தமிழ்நாடு வந்து செல்கிறார்.
தமிழகத்திற்கு எண்ணற்ற முதலீடுகள் மூலமாக தொழில் சாலைகளை பிரதமர் வழங்கினால் அதில் கமிஷனை பெறுவதற்கு மட்டும் திமுக வந்து நிற்பது ஏன்? பல்வேறு திட்டங்களால் மக்கள் மேம்பாடு அடைந்து வருவது தொடர பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்தார்.