"295 இடங்களை பெறுவோம் ; இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி" - ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!
"295 இடங்களை பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி" என இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இதில் மொத்தம் 485 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனுடன் 18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என தகவல் வெளியானது. இன்றுடன் (ஜூன் 1) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நிறைவடைய உள்ள நிலையில் இக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக திமுக பொருளாளார் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது..
” தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்து விவாதித்தோம். பாஜக எப்படி எல்லாம் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது என்பதை மக்களிடம் எடுத்து சென்றுள்ளம். பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று கருத்து கணிப்பு குறித்து அதிகம் விவாதிப்பார்கள். ஆனால், 295 இடங்களைப் பெற்று இந்தியா கூட்டணி குறைந்த பட்சம் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி.