இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயம் போட்டியிடுவோம்! - ஓபிஎஸ் பேட்டி
இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயம் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில், பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, சரத்குமார் தன்னுடைய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நேற்று பாஜகவுடன் இணைத்தார்.
இதையும் படியுங்கள்: போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்த புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்த புகைப்படம்…!
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டது. இதில் பாஜக தரப்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது :
"நாடாளுமன்ற தேர்தல் குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. கூட்டணியில் அதிக கட்சிகள் இடம்பெற்று உள்ளதால் மெகா கூட்டணியாக அமைந்துள்ளது. ஒரே இடத்தை பல்வேறு கட்சிகள் கேட்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து பேசி ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்ட பின் இறுதி முடிவு எடுக்கப்படும். விரைவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து அறிவிப்போம். இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாகத் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது"
இவ்வாறு அவர் கூறினார்.