“இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம், அது பிற மொழிகளை நசுக்கவில்லை” - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
நாடு முழுவதிலுமிருந்து 75 துணிச்சலான பெண்களின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இன்று(மார்ச்.29) பெண்களின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராணி வேலு நாச்சியாரை குறித்து "வீராங்கனா" என்ற தலைப்பில் டிஜிட்டல் புத்தகம் (E-Coffee table book) பா.ஜ.க மகளிரணி சார்பில் வெளியிடப்பட்டது.
இந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது, “இந்தி மொழி மூலம் ஒரு இணைப்பை ஏற்படுத்த விரும்புகிறோம். இந்தி மொழி எந்த பிற மொழிகளையும் நசுக்கவில்லை. இந்தி மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் மரியாதை கொடுக்கிறோம். மொழி பிரச்சனையை எழுப்பி நாட்டை உடைக்க நினைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
2014ல் பாஜக அரசமைத்த பின்னர், இந்தியாவை 5வது பொருளாதார சக்தியாக மாற்றினோம், தற்போது தொடர்ந்து பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது.
வரும் 2027ல் உலகத்தின் 3வது பெரும் பொருளாதார சக்தியாக இந்தியா மாறும்.மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் தான் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி செல்கின்றனர். அனைத்து துறைகளிலும் தலைமை தாங்கி முன்னேறி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை இயற்றியது பாஜக தான். வட இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது ஜான்சி ராணியை ஆனால், அதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர் வேலுநாச்சியார். அதேபோல வேலுநாச்சியார் படையில் இருந்த பெண் வீராங்கனை குயிலியை நினைவுகூர விரும்புகிறேன், தன் உடம்பில் எண்ணெயை உற்றி தீ-யை வைத்து ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் பாய்ந்து ஆங்கிலேயரை சிதறடித்தவர்”
இவ்வாறு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.