For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும்” - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
10:04 PM Jan 27, 2025 IST | Web Editor
“பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும்”    ஆளுநர் ஆர் என்  ரவி பேச்சு
Advertisement

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் 135 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

Advertisement

“சுவாமி சகதானந்தாவின் 135 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மண் சிவனுடைய மண். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிற சிந்தனை கடைசியில் நாம் இறைவனிடம் தான் செல்கிறோம் என்பதுதான். அப்படி வாழ்ந்த ஒருவர்தான் சகஜானந்தா. இந்த பகுதிக்கு அவர்தான் இறைவன்.

சுவாமி சகஜானந்தா தோன்றியிருந்த காலத்தில் நாம் இரண்டு வெவ்வேறு விஷயத்தில் கருத்துக்களை பார்த்துக் கொண்டிருந்தோம். சகஜானந்தா இந்த மண்ணில் தோன்றியபோது இரண்டு பெரிய சக்திகளை எதிர் கொண்டார். அதில் ஒன்று கடவுள் இல்லை என்பது. காரல் மார்க்ஸ் அமெரிக்க பத்திரிகையில் இந்திய கலாச்சாரம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.

இந்திய கலாச்சாரம் என்பது இந்து சமுதாயத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் காரல் மார்க்ஸ், "இந்திய கலாச்சாரத்தை முழுவதுமாக நாம் சீர்குலைத்தால் மட்டுமே உள் நுழைந்து ஆட்சியாள முடியும்" என தெரிவித்திருந்தார்.

உங்கள் கடவுள் தீய சக்தி எங்களது கடவுள் உயர்ந்தது என மதம் மாற்றம் செய்ய கிறிஸ்தவ மிஷனரிகள் முனைந்தார்கள். அவர்கள் பிரிட்டிஷ் அரசு மூலமாக நமது கலாச்சாரத்தை நமது பண்பாட்டினை சீரழிப்பதற்காக மட்டுமே தங்களது குறிக்கோளாக இருந்துள்ளனர்.

பிரிட்டிஷ் அரசாங்கம் ஆளவந்த போது நாம் எப்படி இருந்தோம் அதற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம் என நம்மில் பல பேருக்கு தெரியாமல் உள்ளது. அதனை நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். பட்டியல் சமுதாய மக்கள் போற்றப்பட வேண்டிய மக்கள். ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மை ஆளவந்த போது பட்டியலின மக்களை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

பிரிட்டிஷ் அரசாங்கம் ஆனது 200 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஆளுநர்களை நியமித்து நமது கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் ஆராய்ந்து அதன் மூலம் ஒரு குறிப்பு எடுத்து அவர்களது பணியை ஆரம்பித்தனர். அன்றைய சென்னை பிரசிடென்சி ஆளுநராக இருந்த டிக் 16 கலெக்டர்களை வைத்துக் கொண்டு பணிகளை துவங்கினார்.

அப்போது கிராமங்கள் தோறும் சென்று எத்தனை பள்ளிக்கூடங்கள் உள்ளது எத்தனை உயர்கல்வி கூடங்கள் உள்ளது, அதனை யார் வழி நடத்துகிறார்கள், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என கணக்கெடுத்தனர். அப்பொழுது பிராமணர், வைசியர், சூத்திரர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் படித்தனர். அதனை பின்பற்றி அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதேபோல் இன்றும் பட்டியல் சமூக கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் வந்தால் அவர் நாற்காலியில் அமர முடியாத நிலை உள்ளது. சில இடங்களில் மக்கள் காலணி அணிந்து நடக்க முடியவில்லை, குழந்தைகளை தனிமைப்படுத்துகிறார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இந்த நிலைதான் தொடர்கிறது.

அன்றைய ஆற்காடு மாவட்டத்தை பற்றி நாம் இன்று அனைவரும் இணையத்தின் மூலம் அதனை தெரிந்து கொள்ளலாம். அப்பொழுது ஒவ்வொரு கிராமங்களிலும் எத்தனை பள்ளிக்கூடங்கள் இருந்தது. பிரிட்டீஷ் வந்த பிறகுதான் பல்வேறு பாகுபாடுகளைக் கொண்டு வந்தனர். அதை பற்றி பியூட்டிபுல் டிரி நூலை படித்தால் தெரியும்.

இப்படிப்பட்ட கால சூழ்நிலையில் தான் சுவாமி சகஜானந்தா தோன்றினார். இந்த இரண்டு சக்திகளையும் ஒதுக்கி வைத்து கல்வி மூலம் தான் நம் சமுதாயத்தை வளர்க்க முடியும் என நினைத்தார். பின்பு நந்தனார் கல்விக் கழகத்தின் மூலமாக கல்வி வழங்கி சமூகத்தை உயர்த்துவதற்கு கல்வி மூலமாக முன்னெடுத்தார். கிராமங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து அதன்படி செயல்பட தொடங்கினார்.

கேரளாவில் உள்ள சூழல் இந்த மண்ணில் இல்லை என உணர்ந்த சுவாமி சகஜானந்தா, கலாச்சார மூலமும் கல்வி மூலமாக சமுதாயத்தை முன்னேற்ற முடியும் என உணர்ந்து இப்பகுதியில் கல்வி வளர வேண்டும் என உழைத்தார்.
இங்கே பட்டியல் சமுதாய உறவுகள் அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர். அவர்களை நாம் ஒன்றிணைக்க வேண்டும். சுவாமி சகஜானந்தா கனவை நாம் நினைவாக்க வேண்டும். அவரது கனவை நினைவாக்கும் விதமாக பட்டியல் சமுதாய மக்களை நாம் முன்னே கொண்டுவர வேண்டும்.

2047 ஆண்டு நமது நூறாவது சுதந்திர தினம் கொண்டாடும் போது பட்டியல் சமூகத்தில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வேண்டும். இஸ்ரோ தலைவராக வேண்டும் நாட்டின் அனைத்து துறைகளிலும் தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டும் அதை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்”

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

Tags :
Advertisement