“டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்தானதில் வெற்றி யாருக்கு என பேசக்கூடாது” - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியாக அரசியல் தலைவர் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்தது” என்று கூறியிருந்தார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவின் முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என சொல்லியிருந்தார்.
பின்பு தொடர்ச்சியாக கனிமொழி எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதிமுக நிறுவனர் வைகோ, பாமக அன்புமணி ராமதாஸ், தலைவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இத்திட்டம் ரத்தானதை வரவேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதில் வெற்றி யாருக்கு என பேசக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்களின் எதிர்ப்பு மற்றும் தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்துள்ளனர். மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொண்டு இருக்கிறது. டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதில் வெற்றி யாருக்கு என பேசக் கூடாது. தமிழக அரசு தனி தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதை விவாதமாக மாற்றக் கூடாது”
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.