"போதைப்பொருள், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை தேவை" - ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் இன்றும், நாளையும் 20-வது ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று (நவ.21) தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது,
"அனைவரையும் உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் நாகரீக மூலக்கூறுகள் முன்னேறி செல்ல பாதையாக உள்ளது. ஜி20 கூட்டமைப்பின்கீழ் உலகளாவிய பாரம்பரிய அறிவு களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும். உலக முன்னேற்றத்தில் ஆப்பிரிக்காவின் வளர்ச்சி முக்கியமானது. ஜி-20 கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே திறன் வளர்ப்பு முன்னெடுப்புகள் நடைபெற வேண்டும். ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜி20 கூட்டமைப்பு உலகளாவிய சுகாதார அமைப்பை உருவாக்க வேண்டும். இது பேரிடர், உலகளாவிய மருத்துவ அவசர நிலை காலத்தில் அனைத்து நாடுகளுக்கும் உதவ வழிவகுக்கும். போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள ஜி20 கூட்டமைப்பு முன்வர வேண்டும்"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.