"அதிமுக ஆட்சியில் பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம்" திமுகவால் முடியுமா? - எடப்பாடி பழனிசாமி!
"மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென்காசி, அம்பாசமுத்திரம் தொகுதிகளை அடுத்து ஆலங்குளம் காமராஜர் சாலைக்கு வந்து சேர்ந்தார். அப்போது தொண்டர்கள் ஆரவாரமாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது மக்களிடம் பேசிய இபிஎஸ், "ஆலங்குளத்தில் எழுச்சியைப் பார்க்கும்போது இந்த தொகுதி வெற்றி உறுதியாகிவிட்டது. ஆலங்குளம் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளத்தைக் காணும் வாய்ப்பை அந்த இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறான். நான் எழுச்சி பயணத்தை தொடங்கியதில் இருந்து மிகப்பெரும் கூட்டத்தை ஆலங்குளத்தில் தான் பார்க்கிறேன்.
இது அதிமுக கோட்டை என்பது நிரூபணமாகிவிட்டது. வேளாண்மை செய்யும் மக்கள் நிறைந்த பகுதி. அவர்களை வாழவைத்த அரசு அதிமுக அரசு. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் சிறப்பாக வாழ்ந்தார்கள். விவசாயிகளுக்கு நீர் உயிர் போன்றது. அந்த நீரை முறையாக சேமிக்க, பகிர்ந்தளிக்க நீர் மேலாண்மைத் திட்டம் கொண்டுவந்தோம், குடிமராமத்துத் திட்டம் கொண்டுவந்தோம். ஆனால் இன்றைய அரசு அத்திட்டங்களை எல்லாம் கைவிட்டுவிட்டது.
ஏனென்றால் முதல்வருக்கு விவசாயம் தெரியாது. நமக்கு நாமே பயணத்தில் எங்கள் தலைவாசல் பகுதிக்கு வந்த ஸ்டாலின், கான்கிரீட் சாலை அமைத்து கரும்புத் தோட்டத்தைப் பார்வையிட்டார். நான் இன்றும் விவசாயம் செய்துகொண்டிருக்கிறேன். ஐந்தாண்டு காலத்தில் பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். பேரிடர் பாதிப்பில் விவசாயிகளை பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைத்து அதிக இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். விவசாயிகள் மட்டும்தான் யாரைக் கண்டும் அஞ்சவேண்டியதில்லை, ஐடி, இடி வந்துடும் என்று அஞ்சத்தேவையில்லை.
அதனால்தான் என்னிடத்தில் யாரும் வர முடியவில்லை. எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, முதல்வராக இருந்தேன், தேடிப்பார்த்தும் எதுவுமே கிடைக்கவில்லை. வழக்குப்போட முடியவில்லை. அந்த அளவுக்கு நேர்மையாக வாழக் கூடியவர்கள் விவசாயிகள். எந்த நாட்டில் உணவுப் பிரச்னை இல்லையோ, அந்த நாடு அனைத்து வளங்களிலும் சிறந்து விளங்கும். தொடர்ந்து ஐந்தாண்டு காலம் உணவு தானிய உற்பத்தியில் அதிக உற்பத்தி செய்து விருதுபெற்றோம். வேளாண் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் நூற்றுக்கணக்கான விருதுகள் பெற்றிருக்கிறோம். நாட்டு மக்களுக்கு சேவை செய்து விருதுகளைப் பெறும் இந்த அரசு அல்ல. இந்த ஆட்சி ஊழலுக்காக விருது பெறலாம்.
கொரோனாவிலும், புயலிலும், வறட்சியிலும் விலை உயராமல் பார்த்துக்கொண்டோம். திமுக ஆட்சியில் எந்த கஷ்டமும் இல்லை ஆனால் விலைவாசி உயர்ந்துவிட்டது. வருமானம் குறைவு விலை அதிகம். இந்த ஆட்சியின் தாரக மந்திரம் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன். மத்தியில், மாநிலத்தில் ஆட்சியிலும், கட்சியிலும் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் வருவார்கள். வேறு யாரும் பதவிக்கு வர விடமாட்டார்கள். இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க அதிமுக வெற்றி அடைய வேண்டும். எடப்பாடி, பாஜகவுக்கு அடிமை என்கிறார், எங்களுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு. திமுக 1999, 2001 இரண்டு தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்கள். அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சி. அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் மதவாதக் கட்சியா..?
நடக்கப்போவது சட்டமன்றத் தேர்தலா அல்லது நாடாளுமன்ற தேர்தலா? ஸ்டாலினுக்கு எல்லாம் மறந்துபோச்சு. டெல்லிக்குத் தேர்தல் வருவதாக நினைக்கிறார். அதனால்தான் பாஜக பற்றியே பேசுகிறார். அதிமுக பற்றி பேச முடியவில்லை. இந்த மாநிலத்தில் யார் வரவேண்டும் என்பதற்கான தேர்தல். அதிமுக வர வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். 2011-21 வரையிலான அதிமுக ஆட்சி பற்றி பேசுங்கள். எந்த இடத்துக்குக் கூப்பிட்டாலும் வருகிறேன். நீங்க உங்க சாதனைகளைச் சொல்லுங்கள், நான் எங்கள் சாதனையைச் சொல்றேன். மக்கள் முடிவெடுக்கட்டும்.
அதிமுக ஆட்சியில் எந்தக் குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாததால், பாஜகவை மதவாதக் கட்சி என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் சிந்திக்கக் கூடியவர்கள், ஏமாளிகள் அல்ல. அதனால் பாஜகவை விட்டுவிட்டு அதிமுக பக்கம் வாருங்கள். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார். எமர்ஜென்சியில் ஸ்டாலினை கைது செய்த அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. நான் முதல்வராக இருந்தபோது கேட்ட நிதியைக் கொடுத்தார்கள். சாலைகள், பாலங்கள், பெரிய திட்டங்கள் கொடுத்தனர்.
மெட்ரோ ரயில் ஒரே திட்டத்துக்கு 63 ஆயிரம் ரூபாய் கொடுத்தது மத்திய பாஜக அரசு. இன்னும் பல திட்டங்கள் வழங்கப்பட்டது. ஏழை மாணவர்களும் மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு அமல்படுத்தி 2,818 பேர் இலவசமாக டாக்டர் ஆகிவிட்டனர். இன்று காலையில் கூட 5 மாணவர்கள் என்னிடத்தில் ஆசி பெற்றனர். நீங்கள் கொடுத்த திட்டம் மூலமே மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னார்கள். நேற்று களக்காட்டில் 7.5% உள் இடஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்கும் மாணவருக்கு லேப்டாப்புடன் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தோம்.
கள்ளக்குறிச்சியில் பெயிண்டர் ஒருவரை எம்.எல்.ஏ ஆக்கினோம். திமுகவில் இப்படி யாரும் வர முடியுமா? பவானிசாகர் எம்.எல்.ஏ. டாஸ்மாக்கில் விற்பனையாளராக இருந்தார். மக்களிடம் நல்ல பெயர் இருந்ததால் பதவி தருகிறோம். திமுக காங்கிரஸில் இப்படி சீட் வாங்க முடியுமா? அதிமுகவை உடைக்கப் பார்த்தார்கள். இருபெரும் தலைவர்களின் ஆசியாலும் மக்களிடம் நன் மதிப்பு இருப்பதாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. அத்தனை எதிர்ப்புகளும் தூள் தூளாக உடைக்கப்பட்டது. என்மீதும் வழக்குப்போட்டுப் பார்த்தனர், ஆனால் நிரபராதி என்று விடுதலையானேன்.
இப்போது இருக்கும் அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் இருக்க மாட்டார்கள். உங்களை சந்திக்கும் வாய்ப்புக் குறைவு. இ.டி எப்ப கதவைத் தட்டும் என்று உறக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். அதிமுகவுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. ஏனெனில் நாங்கள் அப்படிப்பட்ட தவறு செய்யவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வழக்குப்போட்டீர்கள். அதையும் சந்திக்கிறோம். தைப்பொங்கலுக்கு 2500ரூபாய் கொடுத்தோம். கொரோனாவில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். மாணவர் நலன் கருதி ஆல் பாஸ் போட்டோம். விவசாயிகள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களுக்கு நன்மை செய்த ஒரே அரசு அதிமுக அரசு. 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் கொடுத்தோம்.
அம்மா மினி கிளினிக் கொடுத்தோம், அதை நிறுத்திவிட்டனர். மீண்டும் அத்திட்டம் கொண்டுவரப்படும். அடுத்தாண்டு அதிமுக வென்றவுடன் தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். அதேபோல ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வீடு கட்டிக்கொடுக்கப்படும். ஏழை என்ற சொல் இல்லை என்பதை உருவாக்கப் பாடுபடுவோம். இந்த தொகுதிக்கு மகளிர் கலைக் கல்லூரி கொடுத்தோம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. காமராஜ் கால்வாய் திட்டம் ஒன்பதரை கோடியில் மீண்டும் செயல்படுத்தப்படும்.
கீழப்பாவூர் பெரியகுளத்தில் விவசாயப் பொருட்களை எடுத்துச்செல்ல பாலம் கட்டும்பணி தொடங்கப்பட்டது. இன்னமும் 20% பணி முடிவடையவில்லை அதுவும் நிறைவேற்றப்படும். கடையம் ராமநதி அணை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் விட்டுவிட்டார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் செயல்படுத்தப்படும். இந்த தொகுதியில் கனிமவளக் கொள்ளை அதிகம் நடப்பதாக செய்திகள் வருகிறது, அதிமுக ஆட்சியில் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.