சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
18வது மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்தார்.
18-வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் முந்தைய மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லாவும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு இன்று (ஜூன் 26) தேர்தல் நடைபெற்றது.
என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிய மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி தரப்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை கனிமொழி மற்றும் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.
இதையடுத்து, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவர்களும் சுரேஷை மக்களவைத் தலைவராக்க வழிமொழிந்தனர். தொடர்ந்து, மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுக்க குரல் வாக்கெடுப்பை மக்களவை இடைக்காலத் சபாநாயகர் நடத்தினார். இதில், மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஓம் பிர்லாவை அழைத்து சென்று அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து அமர வைத்தனர்.
“மக்களவை சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை வாழ்த்த விரும்புகிறேன். இரண்டாவது முறையாக இந்த பதவியில் அமர்ந்திருப்பது மிகப்பெரிய பொறுப்பு. உங்கள் அனுபவத்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் எங்களை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் முகத்தில் தோன்றும் இந்த இனிமையான புன்னகை முழு மக்களவையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
இரண்டாவது முறையாக சபாநாயகர் ஆனது சாதனையாக உள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு சபாநாயகராகப் பதவியேற்கும் வாய்ப்பு பல்ராம் ஜாக்கருக்கு கிடைத்தது. இன்று உங்களுக்கு கிடைத்துள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு காலத்தில் நடக்காத பணிகள், உங்கள் தலைமையிலான மக்களவையில் சாத்தியமாகியுள்ளது. ஜனநாயகத்தின் நீண்ட பயணத்தில் பல மைல்கற்கள் வருகின்றன. அதில், சில சந்தர்ப்பங்களில் மைல்கற்களை நிறுவுவதற்கான வாய்ப்பை நாம் பெறுகிறோம். 17வது மக்களவையின் சாதனைகளால் நாடு பெருமிதம் கொள்ளும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.