For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்” - கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து!

07:01 PM Mar 29, 2024 IST | Web Editor
“இந்தியாவில் தேர்தல் நியாயமாக  சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்”   கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது. 

Advertisement

டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த மார்ச் 21-ம் தேதி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து உலக நாடுகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால், அத்தகைய கருத்துக்கள் இந்திய இறையான்மைக்கு எதிரானது என இந்தியா கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், கெஜ்ரிவால் கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஐநா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் “இந்தியாவிலும், தேர்தல் நடைபெறும் எந்த ஒரு நாட்டிலும், அரசியல் மற்றும் பொதுமக்களின் உரிமைகள் உள்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும், இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க முடியும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார். 

முன்னதாக, செய்தியாளர் சந்திப்பின்போது அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது கவலை அளிக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம். நீதித்துறையின் சுதந்திரம், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் இந்த வழக்கில் பின்பற்றப்படும் என நாங்கள் நம்புகிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் எவரையும் போல, அரவிந்த் கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானவர்.” என்றார்.

அதேபோல், “அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக நாங்கள் காண்காணித்து வருகிறோம். நியாயமான மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சட்ட செயல்முறை ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும்” என அமெரிக்க வெளியுறவுத்துறையும் கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செயல் துணை தலைவர் குளோரியா பெர்பெனாவுக்கு நேரில் ஆஜராகுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement