"2 பெரிய தலைவர்களை நாம் இழந்துள்ளோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!
மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் என 2 பெரிய தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைசர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருவுருவ படங்களை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“நெருக்கடியான காலத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பிடித்தார் மன்மோகன் சிங். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் என 2 பெரிய தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்துள்ளோம். இருவரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் இழப்பு தான்.
10 ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பில் இருந்து ஆட்சியை நடத்தி காட்டியவர் மன்மோகன்சிங். 10 ஆண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் 21 தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தனர். மிக முக்கியமான அமைச்சரவை பொறுப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. 2004-ல் பிரதமர் நாற்காலி தேடிவந்த போதும் அதை மறுத்து மன்மோகன் சிங்குக்கு அளித்தவர் சோனியாகாந்தி.
வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக மாற வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மன்மோகன் சிங் 2 முறை பிரதமரானார். 100 நாள் வேலை, உணவு பாதுகாப்பு சட்டம், லோக்பால் சட்டங்களை மன்மோகன் சிங் கொண்டு வந்தார். சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை கொண்டுவந்தார்.
தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மையம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மன்மோகன் சிங் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. தமிழ்நாட்டின் கனவுகளை மதிக்கக்கூடிய தலைவராக மன்மோகன் சிங் இருந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை எப்போது சந்தித்தாலும் உடல்நலம் குறித்து விசாரிப்பார்" இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.