“பாஜக வேண்டும் என தவம் இருக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்” - அண்ணாமலை பேட்டி!
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மத்திய ரிஜினல் செண்டருக்கு ராஜ ஆதித்திய சோழன் என பெயரை சூட்டியுள்ளார். இது நமக்கு பெருமை. தாய்மொழியை உயர்படிப்புகளில் கொண்டுவர முதலமைச்சருக்கு அமித் ஷா வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியுள்ளார். நடிகர் சந்தான பாரதி புகைப்பட போஸ்டர் ஒட்டியதே திமுகவினர் தான். எங்களுடைய தலைவர்கள் புகைப்படம் இல்லாமல் போஸ்டர் ஒட்டியதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
மும்மொழி கல்விக்கு ஆதரவாக அரசு பள்ளி மாணவர்கள் தானாக வந்து கையெப்பமிடுகிறார்கள். நாங்கள் பேனா கொடுத்து கையொப்பம் இடச் சொல்லவில்லை. முதலில் அன்பில் மகேஷ் அவரது மகனை அரசு பள்ளியில் சேர்க்கட்டும். எங்களின் கையெழுத்து இயக்கம் சர்க்கஸ் மாரி இருப்பதாக முதலமைச்சர் விமர்சனம் செய்கிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய நீட் கையெழுத்து இயக்க என்னாச்சு? 2026ல் தேர்தல் பிரச்சாரத்தில் இரு மொழி கொள்கையவைத்து பிரச்சாரம் செய்ய தயாரா? நாங்கள் மும்மொழி குறித்து பிரச்சாரம் செய்கிறோம்.
மேகதாது அணையை நிறுத்த வேண்டும் என ஏன் கர்நாடகா அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதவில்லை. முதலமைச்சர் தமிழ்நாடு உரிமையை காப்பாற்றுகின்றார் என சொன்னால் நம்ப மாட்டார்கள். தவெகவினர் சிஆர்பிஎஃப் போலீசாரை வெளியே நிற்க வைத்து விட்டு நிகழ்ச்சி நடத்தக்கூடாது. இந்திய அரசு கொடுத்துள்ள வீரர்களை சிறுமைப்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். அதை தாண்டி உங்களுக்கு என்ன பாதுகாப்பு வேண்டுமோ அதை வைத்துக் கொள்ளுங்கள்.

டாஸ்மாக் எந்த சாராய நிறுவனத்திடம் மது வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். இதற்குத்தான் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக நினைக்கின்றேன். சாராய ஆலை நடத்துபவர்கள் எல்லாம் உத்தமர்களா?
ஆயிரம் கோடி வரை வரியை செய்துள்ளதாக கடந்த ஆண்டு வருமானவரித்துறை சொன்னது.
பாஜக தீண்ட தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜகவால்தான் தோற்றோம் என்றார்கள். இன்றைக்கு பாஜக வேண்டும் என்று தவம் இருக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். பாஜக இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் முதலமைச்சர் என்பதை பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னவர்கள் இன்று பா.ஜ.க இல்லாமல் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். நம்மை நம்பி பலர் இந்த கூட்டணியில் பயணிக்கின்றனர். அவர்களை உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றோம்”