“நாங்கள் உத்தவ் தாக்கரே அல்ல... கூட்டணியின் முடிவை ஏற்போம்” - முதலமைச்சர் பதவி குறித்து ஹிண்ட் கொடுத்த ஷிண்டே தரப்பு!
“முதலமைச்சர் பதவி கொடுக்காவிட்டால் விலகுவதற்கு நாங்கள் ஒன்றும் உத்தவ் தாக்கரே அல்ல. ” என ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்பி நரேஷ் மஸ்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு நவ.20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி அரசான பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாயுதி எனும் கூட்டணி அமைத்து களமிறங்கியது. அதேபோல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாதி எனும் கூட்டணி அமைத்து களமிறங்கியது.
இதில் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக 132 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 2 தொகுதிகளிலும் மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றன.
மகாயுதி பிரம்மாண்ட வெற்றிப் பெற்றும் மகாராஷ்டிராவில் இன்னும் ஆட்சி அமையவில்லை. காரணம் முதலமைச்சர் பதவி விவகாரம். பாஜகவே 132 தொகுதிகளில் அமோக வெற்றிப் பெற்ற நிலையில், முதலமைச்சர் பதவி தேவேந்திர பட்னாவிஸ்க்குதான் என பாஜக உறுதியாக உள்ளது. ஆனால் பீகாரில் குறைந்த இடத்தை கைப்பற்றிய நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது போல ஏக்நாத் ஷிண்டேக்கு வழங்கப்பட வேண்டும் என சிவசேனா தரப்பு கூறி வருகிறது.
ஆனால் அதிக இடங்களை கைப்பற்றியவருக்குதான் முதலமைச்சர் பதவி எனவும், ஏக்நாத் ஷிண்டேக்கு துணை முதலமைச்சர் பதவிதான் வழங்கப்படும் என பாஜக உறுதியாக உள்ளது. மேலும் துணை முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஏற்க முடியாமல் போனால், அவர் மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பையும் பாஜக தந்துள்ளது என மத்திய அமைச்சர ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸை மகாயுதி கூட்டணி முடிவு செய்தால், அதனை ஏற்றுக்கொள்ள ஏக்நாத் ஷிண்டே தயாராக இருப்பதாக சிவசேனா எம்பி நரேஷ் மஸ்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர்,
மகாயுதி எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அப்படி முடிவெடுத்தால் தேவேந்திர ஃபட்னாவிஸை எங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வோம். பாஜகவின் முடிவிற்கு ஏக்நாத் ஷிண்டே வருத்தப்படவில்லை. முதலமைச்சர் பதவி கொடுக்காவிட்டால் விலகுவதற்கு நாங்கள் ஒன்றும் உத்தவ் தாக்கரே அல்ல.” என தெரிவித்துள்ளார்.