“மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்” - அரவிந்த் கெஜ்ரிவால்!
தலைநகர் டெல்லியில் 70 தொகுதிக்காக சட்டபேரவை தேர்தல் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்து, இன்று(பிப்.08) வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று 8 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதே போல் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்று 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளார். தற்போதைய முதலமைச்சர் ஆதிஷி, கால்காஜி தொகுதியில் வெற்றி வெற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றிப் பெறவில்லை. பெரும்பான்மையான வெற்றிக்கு 36 தொகுதிகளே தேவைப்படும் நிலையில் தொடர்ந்து பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில் டெல்லி சட்டபேரவை முடிவுகள் குறித்து மக்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் துணை நிற்போம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில், “மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் வெற்றிக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எந்த எதிர்பார்ப்புடன் அவர்களுக்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளார்களோ, அந்த எதிர்பார்ப்பை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளில், பொதுமக்கள் எங்களுக்கு வழங்கிய வாய்ப்பில் நாங்கள் நிறைய சேவைகளை செய்துள்ளோம் . கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் நீர் வளம் உள்ளிட்ட துறைகளிலும் டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து நாங்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மட்டுமல்லாமல், சமூக சேவையையும் தொடர்ந்து செய்வோம். அதிகாரத்திற்காக நாங்கள் அரசியல் வரவில்லை என்பதால், மக்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நாங்கள் எப்போதும் துணை நிற்போம். எங்கள் கட்சி தொண்டர்கள் தேர்தலில் சிறப்பாக பணியாற்றியனர். அவர்களுக்கு நன்றி”
இவ்வாறு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.