For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் திமுக - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...!

திமுக அரசானது நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிப்பதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
06:13 PM Dec 04, 2025 IST | Web Editor
திமுக அரசானது நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிப்பதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் திமுக    எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Advertisement

அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

Advertisement

”தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம் முதல் ஏழை, எளிய மக்களுக்கும்; முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கும், விலையில்லா வேட்டி, சேலை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் தரமான நூல் வழங்கி, நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் வேட்டி மற்றும் சேலைகளைத் தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றவுடன், கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு வழங்கப்பட்டு வந்த விலையில்லா வேட்டி மற்றும் சேலை ஏப்ரல், மே மாதங்களில்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலினின் சாதனை. மேலும், 50 சதவீதத்திற்கும் மேல் வேட்டி மற்றும் சேலைகள் வெளி மாநிலங்களில் இருந்து முறைகேடாக வாங்கப்படுவதால், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்து அவதியுறும் நிலைக்கு திமுக அரசு தள்ளியது. தமிழகத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களை முழுமையாக முடக்கும் எண்ணத்துடன், தரமற்ற நூலை வழங்கி அவர்கள் மீதே பழிபோடும் முயற்சியில் திமுக அரசின் கைத்தறித் துறை ஈடுபட்டு வருவதாக இந்த அரசின் மீது நெசவுத் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திமுக அரசு 2026-ஆம் ஆண்டு விலையில்லா வேட்டி நெய்வதற்கு கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து தரமற்ற பாவு நூலை வழங்கியதாக கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அரசு விநியோகித்த தரமற்ற நூலில் வேட்டி, சேலை நெய்யும் கூட்டுறவு சங்கங்களின் மீது இந்த அரசே பழியைப் போடும் அவலத்தை கைத்தறித் துறை அரங்கேற்றி வருகிறது. அதாவது, தமிழக கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து இந்த ஆண்டு சங்கங்களுக்கு கொடுக்கப்பட்ட வேட்டி உற்பத்திக்கான பாவு நூல் 40 PC நூல்களைக் கொண்டுதான் வேட்டி உற்பத்தி செய்ததாக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.  40 PC 65/35% மில் நூல்களின் தன்மை மாறியிருந்த காரணத்தினால் வேட்டிகளை தரஆய்வு செய்யும்போது, 65/35% தன்மை மாறியுள்ளது என்றும், இதற்கு சங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இந்த திமுக அரசு சொல்கிறது. தரமற்ற நூல்களை அரசே தந்துவிட்டு, இதற்கு சங்கங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவாறு, வரலாறு காணாத வகையில் கைத்தறியில் 4 லட்சம் வேட்டிகளிலும், விசைத்தறியில் 13 லட்சம் வேட்டிகளிலும் நூலின் தன்மை மாறியுள்ளது என்று கூறி சங்கங்களுக்கே அவைகளை திருப்பி அனுப்புவதற்கு இந்த திமுக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தரம் குறைந்த நூலை விநியோகித்ததே கைத்தறித் துறைதான் என்பதையும், இதில் நடைபெற்ற ஊழலையும் மறைத்து, கூட்டுறவு சங்கங்கள் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 ஆயிரம் வேட்டிகளுக்கு இருபது வேட்டிகளை மட்டும் மாதிரியாக எடுத்து, தர சோதனை செய்துள்ளதாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுபோன்ற அரசின் மோசடி வேலை கண்டனத்திற்குரியதாகும்.

இந்த அளவுக்கு வேட்டிகளை, ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சங்கங்களுக்கு திருப்பி அனுப்புவதால், அனைத்து சங்கங்களும் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருப்பது மட்டுமல்ல, தொடர்ந்து இயங்காமல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் சூழ்நிலையை நிர்வாகத் திறனற்ற இந்த திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை சங்கங்களின் நலன் கருதி மீண்டும் ஒருமுறை அனைத்து வேட்டிகளையும் மறு தரப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

தொடர்ந்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் முயற்சியில் முதலமைச்சரின் அரசு ஈடுபடுமேயானால், 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு தக்க பதிலடி தருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement