வயநாடா..? ரேபரேலியா..? எந்த தொகுதியை தக்க வைக்கப் போகிறார் ராகுல் காந்தி? - கார்கே தலைமையில் ஆலோசனை!
மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற ராகுல்காந்தி, தான் எந்த தொகுதியில் எம்.பி.யாக தொடருவார் என்பது குறித்து, மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழு கூடி ஆலோசனை செய்யவுள்ளது
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்த முறை மொத்தம் 99 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை வென்ற கேரள மாநிலம் வயநாட்டு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.
இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விதிகளின்படி, ஒரு நபர் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டில் எதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒருவரால் ஒரே நேரத்தில் இரு பதவியில் இருக்க முடியாது. ஒரு தொகுதியை மட்டுமே ஒரு நேரத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதே இதன் விதியாகும்.
மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 6.47 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல உத்தரப் பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் 6.87 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் 3.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.