"நீர் பாதுகாப்பு என்பது கொள்கை அல்ல... வாழ்க்கையின் ஒரு அங்கம்" - #PMModi
நீர் பாதுகாப்பு என்பது கொள்கை அல்ல, அது வாழ்க்கையின் ஒரு அங்கம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக புரூனே மற்றும் சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நள்ளிரவில் இந்தியா திரும்பினார். இந்த சூழலில், குஜராத்தில் தண்ணீர் சேகரிப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது,
''உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நீரில் இருந்தே தோன்றின. இதனால், அனைத்து உயிர்களும் அதனைச் சார்ந்தே உள்ளன. இதன்காரணமாக தான் தண்ணீர் தானம் மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சிந்தனை மற்றும் செயல்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டது. மிக விரிவானதும் கூட. உலகம் சந்தித்துவரும் தண்ணீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா துணை நிற்க வேண்டும்.
நீர்வளத் துறை சார்பில் குஜராத்தில் இன்று முக்கிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாட்டின் பல பகுதிகள் கடும் மழையினால் பாதிக்கப்பட்டன. தற்போதும் சில மாநிலங்களில் இந்த நிலை நீடிக்கிறது. குஜராத் இந்தமுறை மிகப்பெரிய சவாலை சந்தித்தது. சவாலான சூழலில் இருந்து தற்போது மீண்டுவந்தோம். நீர் பாதுகாப்பு என்பது கொள்கை அல்ல, அது வாழ்க்கையின் ஒரு அங்கம். நீரை பாதுகாப்பதில் மனப்பான்மை மற்றும் பொறுப்பு அவசியம்.
ஏனென்றால இது வளம் சார்ந்தது அல்ல, வாழ்க்கை மற்றும் எதிர்காலம் சார்ந்தது. இதனால்தான் நிலையான எதிர்காலத்துக்கான 9 தீர்மானங்களில் தண்ணீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பை முதன்மையாக்கியுள்ளோம். மிகவும் பயனுள்ள திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.''
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.