கட்சிக்கு எதிராக போர்க்கொடி - கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து 6ஆண்டுகளுக்கு நீக்கம்!
கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து 6ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹாவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு பாஜக வாய்ப்பு தராததால் அதிருப்தி அடைந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா பாஜக வேட்பாளராக போட்டியிடும் சிவமோகா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் துணை முதலமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முடிவைக் கைவிடுமாறு அறிவுறுத்தினார். மேலும், தன்னை டெல்லியில் ஏப். 3-ஆம் தேதி சந்திக்குமாறும் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
இதையும் படியுங்கள் : விண்ணப்பித்து பல நாட்களாகியும் உம்ரா பயணத்திற்கு விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு – சவூதி மற்றும் இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற ஈஸ்வரப்பா, மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முடியாமல் பெங்களூரு திரும்பினார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஈஸ்வரப்பா..
"மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, டெல்லி சென்றிருந்தேன். ஆனால், அங்கு அவரைச் சந்திக்க முடியவில்லை. அவரிடம் சில கேள்விகளை நான் கேட்டிருந்தேன். அதற்கு அவரால் பதிலளிக்க முடியாததால், என்னைச் சந்திக்க அவர் மறுத்துவிட்டதாகக் கருதுகிறேன்.
நான் நியாயத்துக்காகப் போராடுவதை சரி என்று அமித் ஷா உணர்ந்திருக்க வேண்டும். டெல்லிக்கு வருமாறு அழைத்துவிட்டு, என்னை அவர் சந்திக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் பாஜகவிலும் புகுந்துவிட்டது. எடியூரப்பா குடும்பத்தின் ஆதிக்கத்தில் கர்நாடக பாஜக உள்ளது " என கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஈஸ்வரப்பாவை கட்சியிலிருந்து 6ஆண்டுகளுக்கு நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் சிவமோகா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்தது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறி பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை 6 ஆண்டுகள் பாஜக நீக்கியுள்ளது.