வக்ஃபு திருத்தச் சட்டம் : “தமிழ்நாடு எதிர்க்கிறது...முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஷ்மீர் அரசு அஞ்சுகிறது” - மெகபூபா முஃப்தி விமர்சனம்!
ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானம் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியால் இன்று அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு - காஷ்மீர் சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதரை மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி விமர்சித்துள்ளார். மேலும், தேசிய மாநாட்டு தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் அரசு, பாஜகவின் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டத்திற்கு அடிபணிந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
"ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற சபாநாயகர் வக்ஃபு மசோதா மீதான தீர்மானத்தை நிராகரித்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வலுவான பெரும்பான்மையைப் பெற்ற போதிலும், அரசாங்கம் பாஜகவின் முஸ்லிம் விரோத திட்டத்திற்கு முற்றிலும் அடிபணிந்து, இரு தரப்பினரையும் திருப்திப்படுத்த இழிவாக முயற்சிக்கிறது.
வக்ஃபு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழக அரசிடமிருந்து தேசிய மாநாடு (NC) கற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே பிராந்தியமான ஜம்மு-காஷ்மீரில், மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கத்திற்கு இந்த முக்கியமான பிரச்சினையை விவாதிக்க கூட தைரியம் இல்லை என்பது கவலையளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.