For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க மாநிலம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள்!

10:56 AM Nov 04, 2023 IST | Syedibrahim
வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க மாநிலம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள்
Advertisement

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நாளையும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. 

Advertisement

தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.  இதற்காக வரைவுப் பட்டியல் கடந்த 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  அன்றைய தினத்திலிருந்து வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும்,  திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில்,  வாக்குச் சாவடி அலுவலா்களிடமும்,  தோ்தல் துறையின் இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அக்டோபா் 2-ஆம் தேதி நிலவரப்படி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரி 15,187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்கம் செய்வதற்காக 1,914 படிவங்களும்,  ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்ளேயே முகவரியை மாற்றுவதற்காக 19,036 படிவங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36,142 விண்ணப்பங்கள் பொது மக்களால் வழங்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில்,  வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அலுவலா்களிடமும்,  தோ்தல் துறையின் இணையதளம் மூலமும் விண்ணப்பங்களை அளித்தாலும்,  இந்தியத் தோ்தல் ஆணையத்தின் சாா்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், தமிழ்நாட்டில் 31 அமைவிடங்களில் உள்ள 68,000 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. வாக்காளா்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயா் உள்ளதா என்பதை சரிபாா்த்துக் கொள்ளலாம்.

பட்டியலில் பெயா் இல்லாதபட்சத்தில்,  பெயரை சோ்ப்பதற்காக படிவம் 6-ஐ பூா்த்தி செய்து அளிக்கலாம்.  இதற்கான படிவங்கள் சிறப்பு முகாம்களிலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  தொடா்ந்து, 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

Tags :
Advertisement