தமிழ் நாட்டிலும் வாக்கு திருட்டு நடக்கும் சூழல் - ப.சிதம்பரம்!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப் பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பீகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாடினார்.
இந்த நிலையில் இன்று நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,
“போலியான வாக்காளர்களை சேர்ப்பது, உண்மையான வாக்காளர்களை நீக்குவது என இயற்கைக்கு விரோதமாக தில்லு முல்லு ஈடுபட்டு வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது. பீகார், கர்நாடகா, மகாராஷ்டிராவில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வலிமையானது. அதிமுகவையும் குறைவாக மதிப்பிடமாட்டேன். அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பதால் வாக்கு திருட்டு நடக்கும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக அணி அதிமுக அணி என்று இருந்தால் தமிழகத்தில் வாக்குத்திருட்டு நடக்காது என நினைக்கின்றேன். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது போல பாஜக புகுந்த இடம் உருப்படாது. தேர்தல் ஆணையத்தை பாஜக கைப்பாவையாக செயல்படுத்தி வருகின்றது. டி என் சேசன் தேர்தல் ஆணையராக இருந்த பொழுது நடைபெற்ற தேர்தலையும் தற்போது தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்” என்றார்.