“விசிக நிலைப்பாடு விஜய்யையும் இபிஎஸ்-ஐயும் தடுமாற வைத்திருக்கிறது” - திருமாவளவன் எம்.பி. பேச்சு!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பேருந்து நிலையம் அருகே விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா நேற்று(மார்ச்.30) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது பலருக்கும் வியப்பாக இருக்கலாம். “என்ன பெரிய சாதனையை சாதித்துவிட்டீர்கள் என சிலருக்கு வயிற்றெரிச்சல். இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல.இந்திய அளவில் அரசியல் களத்தை உற்றுநோக்குகிற அனைவரும் விசிக-வை வியப்புடன் பாராட்டுகிறார்கள். திமுக-வுக்கெதிரான விமர்சனங்கள் அண்ணா காலத்திலிருந்தே தொடர்கிறது. திமுக-வை வீழ்த்துகிற முயற்சி இன்றைக்கு நேற்றைக்கு தொடங்கியது அல்ல. இன்றைக்கு அரசியல் விடலைகள் சிலர் திமுக-வை சவாலுக்கு இழுக்கிறார்கள். ஆனால், களத்தில் தொடர்ந்து விமர்சனங்களை முறியடித்து திமுக ஆட்சிக்கு வந்துகொண்டேயிருக்கிறது. அந்தக் கட்சியோடு வி.சி.க கொள்கை புரிதலோடு கைகோத்து களமாடுகிறது. இதுதான் பலரின் வயிற்றிலே புளி கரைக்கிறது. வி.சி.க எடுத்திருக்கிற உறுதியான கொள்கை நிலைப்பாட்டினால்தான் இப்போது தமிழ்நாட்டு அரசியலின் திசை வழி மாறியிருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு போய் அமித் ஷாவை பார்த்ததும் விசிக-வின் கொள்கை நிலைப்பாடுதான் காரணம். இன்றைக்கு கட்சி தொடங்கிய விஜய்யின் தவெக கட்சியின் பொதுக்குழுவில் விசிக-வை விமர்சிக்கிறார்களென்றால், அந்த விமர்சனத்துக்கும் காரணம் விசிக எடுத்துள்ள உறுதிமிக்க கொள்கை நிலைப்பாடுதான். விசிக நிலைப்பாடு இவர்களை தடுமாற வைத்திருக்கிறது . இதுதான் இன்றைய தமிழ்நாடு அரசியல். அப்படிப் பார்த்தால் தமிழ்நாடு அரசியலின் மையப்புள்ளியாக விடுதலை சிறுத்தைகள் தான் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
2026 தேர்தலில் DMK vs TVK என்று விஜய் சொல்கிறார். `எடப்பாடி பழனிசாமி போட்டியில் இல்லை. அவரை விட நாங்கள்தான் பெரிய சக்தி என்று அவர் சொல்ல வருகிறார். போட்டி திமுக-வுடன் கிடையாது. இரண்டாவது இடம் யார் என்பதில்தான் விஜய்க்கும், எடப்பாடிக்கும் இடையிலான போட்டி. இரண்டாவது இடம் யார் என்பதில்தான் அண்ணாமலைக்கும், விஜய்க்கும் இடையிலான போட்டி. தமிழ்நாடு அரசியல் களத்தில் இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது? என்பதில்தான் விஜய்யுடன் அரசியல் சண்டை நடக்கிறது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வீழ்த்துவோம் என்று சொல்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் இருக்கிறவரை எந்தக் கொம்பனாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது. விசிக இடம் பெற்றுள்ள அணிதான் தமிழ்நாட்டில் வெற்றி பெறும்”
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.