சூடுபிடிக்கும் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் | #Congress-ல் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா!
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று காங்கிரஸில் இணைந்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து தாய்நாடு திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹரியானா காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா அவரை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார். இதனைத்தொடர்ந்து வினேஷ் போகத் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. மேலும், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் அவர் வகித்து வந்த வேலையில் இருந்தும் ராஜிநாமா செய்தார்.
ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று காங்கிரஸில் இணைந்தனர். இவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.