லிஃப்ட் கொடுப்பது போல் பெண்ணிடம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்... தட்டித் தூக்கிய போலீசார்!
இரவு நேரத்தில் லிஃப்ட் கொடுப்பது போல் பெண்ணிடமிருந்து நகைகளை கொள்ளையடித்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்தில் மங்கை (45) என்ற பெண் நேற்று இரவு பேருந்துக்காக நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கொள்ளையர்கள், லிஃப்ட் கொடுப்பதாக கூறி வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். தூரம் சென்ற பின் வாகனத்தில் பெட்ரோல் இல்லை எனக்கூறி அந்த பெண்ணை இறக்கிவிட்ட கொள்ளையர்கள், கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
உடனடியாக அந்தப் பெண் திருமண நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனிடையே விழுப்புரம் மாவட்டம் அரசூர் நான்கு முனையில், திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளரின் தலைமையிலான காவலர் குழு வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தகவலறிந்த அவர்கள் வேகமாக இருவர் வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் மங்கையிடம் இருந்து கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள் இவர்கள்தான் என தெரிய வந்தது. உடனடியாக போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் கைதான ஜெயந்திநாதன் (34), விக்ரம் குமார் (34) சென்னையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.