"ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்" - பிரேமலதா விஜயகாந்த்!
மக்களை தேடி மக்கள் தலைவர் என்ற தலைப்பில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மக்களை சந்தித்து வாலரைகேட் முதல் திருச்செங்கோடு அண்ணா சிலை வரை நடை பயணம் மேற்கொண்டார். இந்த நடை பயணத்தில் தேமுதிக பொருளாளர் சுதீஷ், நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய சரவணன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு மக்களிடையே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது, "விஜயகாந்த் முதல் தேர்தல் அறிக்கையில் கூறியதை வீடு தேடி ரேஷன் பொருட்கள் என்ற திட்டத்தை தற்போது தாயுமானவர் என்ற திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். ஏற்கனவே டெல்லி கெஜ்ரிவால், ஆந்திரா ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் நடைமுறைப் படுத்தியுள்ளனர். யார் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருந்தாலும் கேப்டனின் சிந்தனையை தான் செயல்படுத்தி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
தாயுமானவர் திட்டத்தின் மூலம் கேப்டனின் கனவு திட்டத்தை முதல் கட்டமாக தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேமுதிக சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார் என்றார். தொடர்ந்து திருச்செங்கோட்டில் மழை பெய்தால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து தெருக்களில் ஓடும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படவில்லை, அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு ரோப் கார் திட்டம் என்ன ஆனது என தெரியவில்லை, 2026 இல் திருச்செங்கோடு தொகுதியில் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் இந்த திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக செய்து கொடுக்கப்படும்.
இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே என்ற கேப்டனின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் வரும் 25ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் அன்று மக்கள் நலத் திட்டங்களை அனைவருக்கும் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக நடைபயணம் மேற்கொண்ட போது பிரேமலதா விஜயகாந்த் அவரது பாதுகாவலர்கள் கட்சிக்காரர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.