“திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார்" - பாஜக தலைவர் அண்ணாமலை!
”புதிய கட்சிகளை பார்த்து பாஜக பயப்படாது. திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார்” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான உயர் படிப்பு படிப்பதற்காக 3 மாதம் லண்டன் சென்றிருந்தார். அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் உயர் படிப்பு முடிந்த நிலையில், இன்று தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
“விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கிறோம். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதன் மூலம் திமுக ஒரு குடும்ப கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. வரும் காலங்களில் உதயநிதியை எங்கு விமர்சிக்க வேண்டுமோ அங்கு விமர்சிப்போம். நன்றாக செயல்பட்டால் பாராட்டுவோம். திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார். புதிதாக எதுவும் இல்லை.
புது நபர்களை பார்த்து பாஜக எப்போதும் பயப்படாது. தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் விஜய் இடம்பிடித்துள்ளார். அதை மறுக்க முடியாது. ஆனால் அரசியல் களம் வேறு. அக்.28க்கு பிறகு எத்தனை முறை விஜய் வெளியில் வந்துள்ளார்? திராவிட கட்சிகளின் ஓட்டு மூன்றாக பிரிந்துள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் தேசிய அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் திமுகவும், ஆம் ஆத்மியும் வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது.
நிரபராதியை கொண்டாடுவது போல் செந்தில்பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடுகிறார். இதுதான் ஆம் ஆத்மியிலும் நடக்கிறது. இதையொல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். வருங்காலத்தில் இதற்கு பதிலடி கொடுப்பார்கள். சீமானின் பாதை வேறு. பா.ஜ.க.வின் பாதை வேறு. 2026 தேர்தல் சரித்திர தேர்தலாக அமையும்” என தெரிவித்தார்.