"எனக்கு எதிராக போட்டியிடும் விஜய்காந்த் மகன் எனக்கும் ஒரு மகன் போலத்தான்" - விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேட்டி!
தனக்கு எதிராக போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தனக்கும் ஒரு மகன் போலத்தான். அவர் நன்றாக இருக்க வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : “ஈரோடு எம்.பி கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாததால் சோகத்தில் தென்னை மரத்திற்கு தெளிக்கும் நஞ்சை கரைத்து குடித்துள்ளார்” – வைகோ பேட்டி!
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் சிவகாசி கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை .பாஜக தலைமையில் இருந்து தேர்ந்தெடுத்து என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். விருதுநகர் தொகுதி மக்களுக்கு செய்வதற்கு நிறைய உள்ளது . மக்களுக்கு தேவையானதை நான் செய்வேன்.
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எனது மகளுடன் படித்த பையன். எனக்கும் ஒரு மகன் போலத்தான். அவர் நன்றாக இருக்க வேண்டும். நடக்க இருக்க கூடிய தேர்தல் சட்டமன்றத் தேர்தல் அல்ல நாடாளுமன்றத் தேர்தல். நாடு இந்த தேர்தலில் நமக்காக என்ன செய்ய உள்ளது என்பதை தான் பார்க்க வேண்டும். நல்ல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலை மேம்படுத்த இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது” என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.