"விஜய் எம்ஜிஆர் மாதிரி தான், ஆனால் எம்ஜிஆர் இல்லை" - செல்லூர் ராஜு!
மதுரை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட விளாங்குடியில், அங்கன்வாடி மையம் மற்றும் நியாய விலை கடை திறப்பு விழா, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "எடப்பாடி பிரச்சாரத்தில் தவெக உறுப்பினர்கள் தான் கொடியை காட்டினார்கள். உண்மையிலேயே விஜயின் தொண்டர்கள் தான் எடப்பாடி பிரச்சாரத்தில் கொடி காட்டினார்கள்.
விஜய்க்காக குரல் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அதற்காகவே தவெக தொண்டர்கள் கொடியை காட்டுகின்றனர். தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை விரும்புகிறார்கள். அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவுக்கு தரம் தாழ்ந்து போக மாட்டோம்.
நாங்கள் அடுத்த கட்சியை மதிப்போம். ஆனால், அந்த கட்சியின் கொடியை பிடிக்க மாட்டோம். தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால் அந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள். அதுபோல தான் விஜயின் ஆதரவு கிடைக்காததால், டிடிவி, அதிமுக குறித்து விமர்சிக்கிறார். சினிமாவிலும், அரசியலிலும் கொடி நாட்டிய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்.மட்டும் தான். அவரை தவிர வேறு யாராலும் முடியாது. எம்.ஜி.ஆர் உடன் எவரையும் ஒப்பிட முடியாது. விஜய் எம்ஜிஆர் மாதிரி தான். எம்ஜிஆர் அல்ல என்று தெரிவித்துள்ளார்.