விடியோ கேம் மோகத்தில் நேர்ந்த விபரீதம்! பதின்ம வயிதினர் லேப்டாப்பை படிக்க மட்டும் பயன்படுத்துவதில்லை! பெற்றோரே உஷார்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் விடியோ கேம் மோகத்தில் மாடியில் இருந்து குதித்து சிறுவன் உயிரை மாய்த்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் ஆர்யா ஸ்ரீராவ் என்ற 15 வயது சிறுவன், தனது குடும்பத்தினருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆர்யா கடந்த வாரம் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 26) 14ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆர்யாவின் பெற்றோர் தெரிவித்ததாவது, ``ஆர்யா படிப்பில் கெட்டிக்காரர்; அவர் சிறு உயரத்தைக் கண்டால்கூட பயப்படுவார். அவர் குதித்த பால்கனி அருகில்கூட செல்லமாட்டார். மேலும், அவர் கடந்த சில தினங்களாக விடியோ கேமில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். நாங்கள் அவர் படிப்பிற்காகத் தான் லேப்டாப் உபயோகிக்கிறார் என்று நினைத்தோம். ஆனால், ஆர்யா விடியோ கேமில் முழுவதுமாக மூழ்கினார். ஒருசமயத்தில் அவரிடம் இருந்து லேப்டாப்பை வாங்க முயன்றபோது, கடுமையாக கோபமடைந்தார். மற்றும் இந்த தற்கொலை சம்பவமும் விடியோ கேமில் கொடுக்கப்பட்ட கட்டளைக்காக நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது” என்று கூறுகின்றனர்.
ஆர்யா 14ஆவது மாடியில் குதித்து உயிரிழந்த சம்பவம்கூட, அவரது பெற்றோருக்கு உடனடியாக தெரியவில்லை. அங்கேயிருந்த குடியிருப்புவாசிகளின் வாட்ஸ்ஆப் குழுவில் இந்த சம்பவம் குறித்து பகிரப்பட்ட பிறகு, ஆர்யாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில், ஆர்யாவின் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவர்கள் கவனிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆர்யாவின் அறைக்குள் சென்று சோதனை செய்தபோது, அங்கு ஒரு ஓவியம் வரையப்பட்ட நோட் கண்டெடுக்கப்பட்டது.
அந்த ஓவியத்தில், ஆர்யா வசித்த வீட்டின் வரைபடமும், பால்கனியில் இருந்து குதிக்கவேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர், ப்ளு வேல் என்ற உயிர்க்கொல்லி விடியோ கேமை ஆர்யா விளையாடியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கின்றனர். இருப்பினும், ஆர்யா விளையாடுவதற்காக உபயோகித்த லேப்டாப்பைக் கைப்பற்றிய காவல்துறையினர், லேப்டாப்பில் கடவுச்சொல் போடப்பட்டிருப்பதால், லேப்டாப்பை இயக்குவதில் சிரமம் உள்ளதாகத் தெரிவித்தனர். அதோடு, குழந்தைகளின் மீது பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிப்பைச் செலுத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்.