துணை குடியரசுத் தலைவர் தேர்தல் - இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!
நாட்டின் துணை ஜனாதிபதியும் இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21 அன்று திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது.இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது துணை ஜனாதிபதி பதவி தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது. மேலும்தேர்தல் அட்டவணையையும் கடந்த 7-ந்தேதி வெளியிட்டது. அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் ஆலோசனைக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த C. P. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமானது காங்கிரஸ் கட்சி தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கேவின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத் பவரார், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி,திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்குமார் ஹன்ஸ்டக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் தமிழர் ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் இந்தியா கூட்டணியரும் தமிழர் ஒருவரையே வேட்பாளராக முன் நிறுத்த உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.