அசாமில் வாகன விபத்து - தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு!
அசாம் மாநிலத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியை அடுத்துள்ள எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் இன்பராஜ் அசாம் மாநிலத்தில் உள்ள நிஹாம்பள்ளி முகாமில் இந்திய இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்பராஜ் இன்று மதியம் முகாமிற்கு உணவு எடுத்துச் செல்லும் போது, அவர் சென்ற இராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் இன்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வாகனத்தை ஓட்டி வந்த இராணுவ வீரர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்பராஜ்க்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தாக கூறப்படுகிறது. திருமணமாகி ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், இன்பராஜ் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாளை மறுநாள் இன்பராஜின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.