#UttarPradesh | “சொத்து விவரங்கள் சமர்பிக்கவில்லை எனில் சம்பளம் கிடையாது” - அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
அரசு பணியாளர்கள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை ஆக. 31-ம் தேதிக்குள் சமர்பிக்காவிட்டால் இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை தடுக்கும் வகையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்தாண்டு (2023) ஆகஸ்ட் மாதம் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, அரசு வேலை செய்பவர்கள் அனைவரும் தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை அரசின் இணையதளமான Manav Sampada-ல் டிசம்பர் 31, 2023-க்குள் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 17.88 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், பெரும்பாலான பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்யாததால் அதற்கான கால அவசாகம் இந்தாண்டு (2024) ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஜூலை 31-ம் தேதி சொத்து விவரங்களை சமப்பிக்க கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. இறுதியான ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மாதம் 31-ம் தேதிக்குள் விவரங்களை ஆன்லைனில் சமர்பிக்காவிட்டால் அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது எனவும், யாரெல்லாம் விவரங்களை சமர்பிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அரசு பல முறை காலக்கெடுவை நீட்டித்தும் இன்னும் 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாத காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஸ்தோஷ் வர்மா விமர்சனம் செய்துள்ளார். மாநில அரசு இத்திட்டத்தை 2017-ம் ஆண்டே ஏன் கொண்டு வரவில்லை எனவும், தங்களது அரசு ஊழியர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்பதை முதலமைச்சர் புரிந்து கொண்டுள்ளதால் தான் இத்திட்டத்தை மாநில அரசால் இன்னும் செயல்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.