#Usilampatti | ஆடி உற்சவ திருவிழா - வெகுவிமரிசையாக நடைபெற்ற கிடா முட்டு போட்டி!
உசிலம்பட்டி அருகே வீரா கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கிடா முட்டு
போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியில் வீரா கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கிடா முட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குரும்பை, சின்னக்கருப்பு, வெள்ளைமறை, கண் செவலை உள்ளிட்ட பல்வேறு வகையான 80 ஜோடி கிடாக்கள் பங்கேற்று ஆக்ரோசமாக மோதிக் கொண்டன.
நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கிடாக்களில் அதிகமுறை மோதிக் கொண்டு வெற்றி பெற்ற கிடாக்களுக்கு 10 கிலோ மற்றும் 5 கிலோ பித்தளை அண்டாவும், 80 முறை முட்டி மோதிக் கொண்டு வெற்றி பெற்ற ஜோடி கிடாவிற்கு 5 ஆயிரம் ரொக்கமும், பித்தளை அண்டாவும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து கிடாக்களுக்கும் 2 கிலோ சில்வர் அண்டா, விழா கமிட்டியினரால் பரிசாக வழங்கப்பட்டது.
இவ்விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், திமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, முருகன் மற்றும் நகர செயலாளர் தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர். உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு போட்டியை கண்டு ரசித்தனர்.