Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை!” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

08:27 PM Dec 10, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதியாக ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை, மாநில அரசுக்கான பேரிடர் நிவாரணப் பங்கை, நிவாரண நிதி போன்று கணக்குக் காட்டுகிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.  

Advertisement

பேரிடர் நிவாரண நிதியாக 7,532 கோடி ரூபாயை கடந்த 13.06.2023அன்று 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது . இதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.450 கோடி ரூபாய் மட்டுமே. 6 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகையை, ஏதோ புயல் பாதித்த பிறகு தமிழ்நாட்டுக்கு வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்தியில் ஆளும் மோடி அரசும், இங்குள்ள பாஜக எடுபிடிகளும் முனைந்திருக்கிறார்கள்.

70 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிக கனமழை பெய்து பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதி ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ஏற்கெனவே வழங்கப்பட்ட 450 கோடி ரூபாயை மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு பொய் கணக்கு காட்டுகிறார்கள். அதேசமயம், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு 812 கோடி ரூபாயும் மகாராஷ்ட்டிராவுக்கு 1420.80 கோடி ரூபாயும் வழங்கி பாரபட்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது மோடி அரசு.

இவ்வாறு வழங்கப்படும் தேசிய பேரிடர் பொறுப்பு நிதியில் 75 சதவிகிதம் மத்திய அரசின் பங்கும் 25 சதவிகிதம் மாநில அரசின் பங்கும் இருக்கும். ஜிஎஸ்டி வரி வருவாயை அதிக அளவில் செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முன் வரிசையில் இருக்கிறது. ஆனால், ஜிஎஸ்டி வரி வருவாயில் உரிய பங்கீட்டைப் பெற இன்று வரை போராட வேண்டியிருக்கிறது.

ஆனால், குறைவான வரி வருவாயை மத்திய அரசுக்கு தரும் உத்தரப்பிரதேசத்துக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு, அதிக அளவு வருவாயைத் தரும் தமிழ்நாட்டுக்குக் கிள்ளித்தருவது மோடி அரசின் மோசடி அல்லவா? தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையோ, இந்த உண்மை நிலவரத்தை மூடி மறைத்துவிட்டு, பொறுப்பற்ற முறையில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்திக் கொண்டிருக்கிறார்.

வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மத்திய இணை ராஜிவ் சந்திரசேகரும் ஏதோ அள்ளிக் கொடுத்துவிட்டுபோனதைப் போன்ற பித்தலாட்டத்தை அண்ணாமலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்.

ராஜ்நாத் சிங் புதிதாக எவ்வித வெள்ள நிவாரணத் தொகையையும் அறிவிக்கவில்லை. மாறாக, எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப்படும் பேரிடர் நிதியின் 75 சதவீதத் தொகையான 450 கோடி ரூபாயை தான் அறிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டதோ 5,060கோடி ரூபாய். ஆனால் இதுவரை மத்திய அரசு அது பற்றி வாயே திறக்கவில்லை. வழக்கமான மாநில அரசுக்கான பேரிடர் நிவாரணப் பங்கை, நிவாரண நிதி போன்று கணக்குக் காட்டி ஏமாற்றுகிறது மத்திய நிதித்துறை அமைச்சகம்.

மிக்ஜாம் புயல் நிவாரணமாக 1011.29 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியதாக அண்ணமாலை உள்ளிட்ட பாஜகவினர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

விஷன் 2047-ன் கீழ், பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் வகையில் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய 7 பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி டெல்லியில் நடந்த மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து, சென்னையில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற 561.29 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்வதாக 09.08.23 அன்று ஊடகங்களில் செய்தி வெளியாகின.

சென்னையில் நகர்ப்புற வெள்ள மேலாண்மைத் திட்டம் என்பது, நகரத்தில் உள்ள பழைய சிறு நீர்நிலைகளுக்கு உபரி கால்வாய்களைச் சீரமைத்தல், 484 ஏக்கர் பரப்பளவில் உள்ள 8 நீர்நிலைகளை மீட்டெடுத்தல், வெள்ளப் பெருக்கின் போது ரெகுலேட்டர்களை தொலைதூரத்தில் இயக்குவதற்கான மென்பொருளை நிறுவுதல் ஆகியவை ஆகும். இந்த திட்டம் கடந்த 3 மாதங்களாக அறிவிப்போடு மட்டுமே உள்ளது. இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

மாநில பேரிடர் நிவாரண நிதி என்பது புயல் வெள்ளத்தால் அல்லது வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய பணிகளை மேற்கொள்வதும் இழப்பை ஈடுகட்ட நிதி உதவி வழங்குவதும் ஆகும்.

நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டமும், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடும் வெவ்வேறு. 450கோடி ரூபாய் ஒதுக்கீடு மட்டுமே மிக்ஜாம் புயல் நிவாரணம் ஆகும். 561.29 கோடி ரூபாய் என்பது இனி வரும் காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள வெள்ள அபாய தடுப்புப் பணி திட்டத்துக்கான நிதியாகும், இந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்து அருவெறுக்கத்தக்க அரசியல் பிழைப்பைச் செய்வதற்காக, 1011.29 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை தன் எஜமானர்களின் உத்தரவின்படி அண்ணாமலை மேற்கொண்டிருக்கிறார்.

மிக்ஜாம் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதலமைச்சர் கேட்டது ரூ.5,060 கோடி ரூபாய். ஆனால் யானை பசிக்கு சோளப்பொறி போல் வெறும் 450 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாட்டை வழக்கம்போல் மத்திய அரசு வஞ்சித்திருக்கிறது.இது தான் உண்மை நிலவரம்.

கடந்த ஆகஸ்ட் மாதமே அறிவிக்கப்பட்ட திட்டத்தை மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கான புதிய திட்டம் போல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது அறிவித்திருப்பது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் கேவலமான செயலாகும்.

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை மக்களிடம் அதிகமாக காட்டுவதற்காக, இனி மேற்கொள்ள உள்ள திட்டத்துக்கான தொகையையும் சேர்த்துச் சொன்ன அண்ணாமலை போன்ற மோசடியாளர்களின் முகத்திரை கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. வெள்ள நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்து மக்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது தமிழ்நாடு அரசு. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக பொய்யர்கள், தவறான தகவலை கொடுத்து மக்களை குழப்ப முயல்கிறார்கள். அவர்களது கேவலமான செயல் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது.

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பது போல், பொய் சொல்வது ஒன்று மட்டுமே பாஜகவின் தலைவர் முதல் தொண்டர் வரை பிழைப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்வதோடு, களப்பணியாற்றும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்தால் அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Tags :
AnnamalaiBJPchennai cycloneChennai FloodsChennai Floods 2023Chennai rainCongressCyclone MichaungCyclone MichuangK.S.AlagiriMichaungnews7 tamilNews7 Tamil UpdatesTamilNadu
Advertisement
Next Article