மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை : யாத்திரையில் அதிர்ச்சி சம்பவம்!
மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சரும், பாஜக தலைவருமான ரக்ஷா காட்சேவின் மகளுக்கு சிறுவர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மகாராஷ்டிராவின் கோத்தாலி கிராமத்தில் ஒரு யாத்திரை நடைபெறும். இந்த யாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொள்வர். அந்த வகையில் இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாத்திரையில் அமைச்சர் ரக்ஷா காட்சேவின் மகள் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் யாத்திரையின்போது சிலர் கும்பலாக சேர்ந்து மத்திய இணையமைச்சரின் மகள் உள்பட மேலும் சில சிறுமிகளை கிண்டல் செய்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர் மகளின் பாதுகாவலர் அவர்களை தடுத்துள்ளார். ஆனால் அவருடன் மோதலில் ஈடுபட்டு மீண்டும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் சென்று சிறுமி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் ரக்ஷா காட்சே உடனடியாக முக்தைநகர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இணையமைச்சர் ரக்ஷா காட்சே,
சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் கோத்தாலியில் ஒரு யாத்திரை ஏற்பாடு செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் என் மகள் இந்த யாத்திரைக்கு சென்றாள். அப்போது சில இளைஞர்கள் எனது மகளை துன்புறுத்தி உள்ளனர். இதுபற்றி போலீசில் புகாரளித்து உள்ளேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு மத்திய அமைச்சராகவோ, எம்பியாகவோ இங்கு வரவில்லை. ஒரு தாயாக நீதிகேட்டு வந்துள்ளேன். ஒரு பொது பிரதிநிதியின் மகளுக்கு பாதுகாப்பு இல்லையென்றால், மற்றவர்களின் நிலை என்னவாகும்?. சட்டத்தை அமல்படுத்த மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க நான் வலியுறுத்துவேன்.
மகாராஷ்டிரா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. சட்டத்தின் மீது பயம் இல்லை. பல பெண்கள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது வரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் குறித்த முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனால் அவர்களையும் போலீசார் விரைவில் கைது செய்ய உள்ளனர்.
இதுதொடர்பாக முக்தைநகர் துணை காவல் கண்காணிப்பாளர் குஷாநாத் பிங்டே கூறுகையில்,“கடந்த பிப்ரவரி 28 ம் தேதி முக்தை நகர் தாலுகா கோதலி கிராமத்தில் யாத்திரை நடந்தது. அனிகெட் குய் மற்றும் 6 நண்பர்கள் யாத்திரையில் பங்கேற்றனர். இந்த கும்பல் 3-4 சிறுமிகளை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இவர்கள் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” எனக் கூறினார்.
மேலும் இந்த வழக்கில் எந்த ஒரு அரசியல் அழுத்தமும் இல்லை எனக்கூறிய அவர், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.