மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை - 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
பீளமேடு பகுதியில், கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் திறப்பு விழா நாளை (பிப்.26) காலை நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலும், கோவையில் இருந்து ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்சி அலுவலக கட்டிடங்களையும் மத்திய அமைச்சர் அமித்ஷா காகொணலிக்காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
அன்றைய தினம் மாலை கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில், மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 9 மணியளவில் கோவை வருகிறார். அங்கிருந்து அவர் கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று அங்கு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் நாளை (பிப்.25) காலை பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார்.
இதற்காக நாளை மாலை 4 மணியளவில் நட்சத்திர விடுதியில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையம் செல்கிறார். இதனையடுத்து அவர் அங்குள்ள தியான லிங்கம் இருக்கும் இடத்துக்கு சென்று லிங்க பைரவியை வழிபடுகிறார். சிவராத்திரி விழா நடைபெறும் ஆதியோகி சிலை இருக்கும் இடத்துக்கு கார் மூலம் செல்கிறார்.
அங்கு நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்ததும் அமித்ஷா ஈஷா மையத்தில் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை மறுநாள் (பிப்.27) காலை 9 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்துக்கு சென்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவையில் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் ஆகியோர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 7 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா தங்குமிடம், பீளமேடு கட்சி அலுவலகம் உள்ள பகுதி, ஈஷா வளாகம், அமித்ஷா செல்லும் பாதைகள் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.