கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் - உயிர்தப்பிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
பீகாரில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய நிலையில், விபத்து ஏற்படாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது. 3 ஆம் கட்ட தேர்தல் மே.7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பீகாரின் 5 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று பீகாரின் பெகுசராய் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார்.
இந்த பிரச்சார கூட்டம் முடிந்த நிலையில், அமித்ஷா அங்கிருந்த புறப்பட தான் வந்த ஹெலிகாப்டரில் ஏறினார். அப்போது கிளம்புவதற்காக ஹெலிகாப்டர் டேக் ஆஃப் ஆன நிலையில், பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் ஹெலிகாப்டர் டேக் ஆப் ஆக முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து ஒருபக்கமாக பறந்தது. ஹெலிகாப்டர் ஒரு பக்கமாக காற்றால் இழுக்கப்பட்ட நிலையில் உள்ளிருக்கும் அமித்ஷாவிற்கு ஏதேனும் ஆகிவிடுமோ என தொண்டர்கள் பயமுற்றனர். பின்னர் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஹெலிகாப்டர் பறந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் அமித்ஷா உயிர் தப்பினார்.