"2026 சட்டமன்ற தேர்தலில் 234-ல் 200 தொகுதிகள் டார்கெட்" - துணை முதலமைச்சர் #UdhayanidhiStalin பேச்சு!
2026 சட்டமன்ற தேர்தலில் 234-ல் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சேலம் மாவட்டம் நேரு கலையரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 விளையாட்டு உபகரண தொகுப்புகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவதும்,
“2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் தான் உள்ளன. இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தல் செமி ஃபைனல், 2026 சட்டமன்ற தேர்தல் தான் ஃபைனல் கேம். அதில் நாம் ஜெயிக்க வேண்டும். 234 தொகுதிகளில் 200-ல் திமுக வெற்றி பெற்றிருக்க வேண்டும். 200 என்பது டார்கெட், இளைஞர் அணியினர் 200-ஐ தாண்டி திமுகவை ஜெயிக்க வைக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்காக இளைஞர் அணி தீவிரமாக செயல்பட வேண்டும். உங்களை எல்லாம் சந்திப்பதில் எங்களுக்கு பத்தாயிரம் மடங்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், அதிகமாக உழைக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன். உங்கள் ஆதரவு, அன்பால்தான் எனக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வந்துள்ளது என நம்புகிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போது யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது முதலமைச்சருக்கு தெரியும்.
இந்தியாவில் துடிப்புடன் செயல்படும் ஒரு இளைஞர் அணி என்றால் அது திமுக இளைஞரணி தான். 44 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணி எப்படி செயல்பட்டதோ அதை எழுச்சியோடு இன்றும் செயல்படுகிறது. திமுக இளைஞரணி 234 தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் விரைவில் திறக்கப்படும். கனமழை பெய்யக்கூடிய காலத்தில் இளைஞர் அணி தயாராக இருக்க வேண்டும். எப்போதும் மக்களுடன் இருக்கும் ஒரு இயக்கம் தான் திமுக அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது மழைக்காலத்திலும், பேரிடர் காலத்திலும் ஒரு அதிமுகவினரை கூட பார்க்க முடியாது.
இளைஞர் அணி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும். கடந்த 9 தேர்தல்களில் திமுகவிற்கு தொடர் வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர்" இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இதையும் படியுங்கள் : “திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்” - எதிர்கட்சித் தலைவர் #EPS பேச்சு!
இதையடுத்து, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
"கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சட்டமன்றத் தொகுதி தோறும் கலைஞர் நூலகங்களை திறக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியதோடு, என் உயிரினும் மேலான பேச்சுப்போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்புற செய்த அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களை பாராட்டினோம்.
ஒன்றிய – நகர –பகுதி, பேரூர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் நியமனங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது தொடர்பான தகவல்களை எடுத்துரைத்தோம். மேலும், வடகிழக்கு பருவமழை நேரத்தில் இளைஞரணியினர் அரசு மற்றும் மக்களுக்கு பாலமாக இருந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
முக்கியமாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை மாவட்ட – ஒன்றிய – நகர பகுதி - பேரூர் கழக செயலாளர்களுடன் இணைந்து இப்போதே மேற்கொண்டிட வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினோம். 2026-ல் 200-க்கும் அதிகமான இடங்களில் கழக அணி வெல்ல இளைஞரணியினர் ஓயாது உழைப்போம்"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.