10 பவுன் நகைக்காக தாய், மகனை கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை!
மதுரை, மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (38) மற்றும் முத்துப்பாண்டி (41) ஆகிய இருவரும் கடந்த 2011-ஆம் ஆண்டு துர்காதேவி என்ற தாயையும், அவரது 6 வயது மகனையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2011-ஆம் ஆண்டில், மதுரை, காமராஜர் சாலை, நவரத்தினபுரம் 2-வது தெருவில் வசித்து வந்த துர்காதேவி வீட்டில், காளிமுத்து மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் 10.5 பவுன் நகை மற்றும் ரூ. 86 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, துர்காதேவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
தாய் கொல்லப்படுவதை நேரில் பார்த்த அவரது 6 வயது மகனையும் கொலையாளிகள் விட்டு வைக்காமல், அவனையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக, தெப்பக்குளம் காவல்துறையினர் காளிமுத்து, முத்துப்பாண்டி மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகிய மூவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது, அலெக்ஸ் பாண்டியன் உயிரிழந்துவிட்டார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிகளான காளிமுத்து மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.