தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து - 6 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!
தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் உள்ளது.
இந்த கால்வாயின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று தண்ணீர் கொண்டு செல்லும் சுரங்கப்பாதை கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது, அங்கு பணியில் இருந்த ஆறு தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கம்போல பணியாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சுரங்கபாதையின் உள்ளே திடீரென 12-13 கி.மீ தூரத்தில் கூரை இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். பலர் வெளியேவந்த நிலையில் 6முதல் 8 பேர்வரை உள்ளே சிக்கியிருக்கலாம் என பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், தீயணைப்புத் துறை, ஹைதராபாத் பேரிடர் மீட்புத்துறை அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை தீவிரப்படுத்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.