டங்ஸ்டன் திட்டம் ரத்து - வல்லாளப்பட்டி மக்களை சந்திக்கும் மத்திய அமைச்சர்!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த 23ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி சந்திக்கவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பகுதி அம்பலகாரர்கள், கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடுவதாக, மத்திய அரசு அறிவித்ததையடுத்து, பிரதமர் மோடிக்கும் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிகும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
கிராம மக்கள் பிரதிநிதிகள் குழு, அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தபோது, அவரை தங்கள் கிராமத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். தன்னரசு மத்தம் மேலநாடு பொதுமக்கள் மற்றும் அம்பலகாரர்களின் அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்ட நமது மத்திய அமைச்சர் வரும் ஜனவரி 30, 2025 அன்று மாலை 4 மணிக்கு, மதுரை அ.வல்லாளப்பட்டிக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்திக்கவிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டங்ஸ்டன் ஏலம் ரத்து தொடர்பாக, ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அதன்படி அவர் அரிட்டாபட்டி, வள்ளாலப்பட்டி கிராம மக்களை சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார். அதேபோல் டங்ஸ்டன் சுரங்கத்தை தடுத்து நிறுத்தியதாக விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தனர்.